தேசிய அறிவியல் தினம்: தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி, திருச்சி.
தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் அறிவியல் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடக்க உரை: பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஜீவானந்தன் , அறிவியல் தினத்தின் நோக்கத்தையும், சர் சி.வி. ராமனின் பங்களிப்புகளையும் மாணவர்களுக்குப் புரியவைத்தார்.
அறிவியல் தினத்தின் முக்கியத்துவம்: ஆசிரியை மேரி செரோபியா, மாணவர்களுக்கு அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அறிவியலை பரப்பும் நோக்கில், மாணவர்கள் வீட்டில் உள்ள அறிவியல் சாதனங்களைப் பற்றிச் சிறிய ஆய்வுகளை செய்து, அதை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
விழாவின் சிறப்புரை: காஞ்சிபுரம் DIET முன்னாள் முதல்வர் திரு. எஸ். சிவகுமார் , 1928-ல் சர் சி.வி. ராமன் கண்டறிந்த “ராமன் விளைவு” பற்றியும், அதனால் இந்திய அறிவியல் உலகிற்கு கிடைத்த பெருமை பற்றியும் பேசினார். 1986-ம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு அறிவித்த இந்த நாளில், அறிவியல் பரப்புதலுக்காக சிறந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுவதை குறிப்பிட்டார்.

மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகள்: மாணவர்கள் சர் சி.வி. ராமன் முகமூடி அணிந்து, அறிவியல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளியில் மாணவர்களின் அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு, அதைப் பற்றிய விவாதங்கள் நடந்தன.
சர் சி.வி. ராமன்: வாழ்க்கை மற்றும் சாதனைகள்: தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் அவர்கள், சர் சி.வி. ராமனின் வாழ்க்கை வரலாறு, அவரின் ஆராய்ச்சிப் பயணம், மற்றும் உலகளாவிய அங்கீகாரங்களைப் பற்றிச் சொல்லினார். 1930-ல் ராமனுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு, அவரது ஒளிச்சிதறல் ஆய்வின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்தது.
ராமன் விளைவு: வானம் ஏன் நீலமாக தெரிகிறது என்ற சிந்தனை, ராமனை ஆழமான ஆராய்ச்சிக்குத் தூண்டியது. ஒளி ஊடுருவக்கூடிய ஊடகங்களில் செல்லும்போது ஏற்படும் மூலக்கூறு சிதறலை (Molecular Scattering of Light) கண்டறிந்த ராமன், வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவி மூலம் ‘ராமன் வரிகள்’ எனப்படும் புதிய நிற வரிசைகளை பதிவு செய்தார்.
நிகழ்ச்சியின் நிறைவு: பள்ளி ஆசிரியர்கள் சரண்யா, உமா, மோகனா ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக செய்து, மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தனர். தேசிய அறிவியல் தினம், மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வை அதிகரிக்க வழிவகுத்ததாக அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.












