திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு சுடுமண் மணிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் நூலகப் பணியாளர் மீனாட்சி சுந்தரம், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன் முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் பேசுகையில், சுடுமண் பொருட்கள் என்பவை களிமண்ணால் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான பொருட்களாகும். அவ்வாறு பழங்காலத்தில் சுடுமண் மணிகள் பயன்பாடு இருந்துள்ளன. இவை வரலாற்று தகவல்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு இடங்களிலும் பண்பாட்டு எச்சங்களை காணலாம். அவ்வாறு தொல்லியல் துறையினர் ஏராளமான தரவுகளை வரலாற்று உலகிற்கு வழங்கி உள்ளனர். வரலாற்று மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ள அருங்காட்சியகம் மற்றும் நூலகங்களுக்கு சென்று வரலாற்றுச் சார்ந்த பொருட்களை பார்த்தும் நூல்களை படிக்கவும் வேண்டும்.
துளையுடன் கூடிய உருண்டையான
சுடுமண் மணிகளை தயாரித்து அணிகலன்களாக பயன்படுத்தி உள்ளனர். பல இடங்களில் எடுக்கப்பட்டுள்ள சுடுமண் மணிகள் தொல்லியல் சான்றாக இருப்பதை பல தொல்லியல் நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே நமது முன்னோர்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற தொல்பொருட்கள் குறித்து அறிந்து கொள்ள தொல்லியல், தொல்பொருள் நூல்களை அனைவரும் படிக்க வேண்டும். பல தொல்பொருட்கள் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றுவதாக உள்ளது என்றார்.
பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர், லோகேஷ்வரன், இசாக். கிஷோர் குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












