• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி தூய வளனார் கல்லூரிப் பட்டமளிப்பு விழா!
தமிழ்நாடு

திருச்சி தூய வளனார் கல்லூரிப் பட்டமளிப்பு விழா!

Email :9

திருச்சி தூய வளனார் கல்லூரிப் பட்டமளிப்பு விழா!

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் 8.3.2026 அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் க. இராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார்.

கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. முன்னிலையில், கல்லூரியின் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. பட்டமளிப்பு நிகழ்வுகளைத் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வரவேற்புரை ஆற்றி, கல்லூரியின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் அறிக்கையாக வாசித்தார்.

சிறப்பு விருந்தினர் தமது உரையில், கல்வியும் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற அறிவும் திறமையும் வலிமையான கருவிகள். அவற்றைக் கொண்டு சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும். பட்டம் பெற்றிருக்கின்ற மாணவ மாணவியர் சமூகத்தில் தாங்கள் பணி செய்யும் செயல்கள் ஒவ்வொன்றிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு புதுமைகளைப் படைக்க வேண்டும். கற்றலை வாழ்க்கை முழுமைக்கும் தொடர்ந்திட வேண்டும். அதன்மூலம் அறிவுசார் முகத்தினையும் முன்னேற்றத்திற்கான பல மாற்றங்களையும் சமூகத்தில் உருவாக்கிட  வேண்டும்  எனப்பதிவு  செய்தார்.

தேர்வு நெறியாளர் முனைவர் கு.அலெக்ஸ் பெயர்களை வாசிக்க சிறப்பு விருந்தினர் பல்கலைக்கழக பதக்கங்களைப் பெற்ற 8 மாணவ மாணவியருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார். மேலும் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பிடித்த 35 மாணவ மாணவியருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 758 முதுநிலை மற்றும் 1341 இளநிலை மாணாக்கர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அவர்கள் உறுதிமொழியை வாசிக்க பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். தேர்வு நெறியாளர், புல முதன்மையர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக நாட்டுப்பண்ணுடன் பட்டமளிப்பு விழா நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts