திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையேற்று இசுலாமிய மார்க்கம் உணர்த்தும் சகோதரத்துவத்தைச் சுட்டிக்காட்டி தம் கருத்துக்களைப் பகிந்து கொண்டு இப்தார் நோன்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் தம் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜமால் முகமது கல்லூரி அரபித்துறைப் பேராசிரியர் மௌலானா அல் ஹாபீஸ் முனைவர் ஏ.எம். அலி இப்ராஹீம் ஜமாலி சிறப்பு விருந்தினராகவும், மௌலானா அல் ஹாபீஸ் எஸ்.நிசார் முகமது பகாவி மற்றும் பி.கே. தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாவும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

முனைவர் ஏ.எம். அலி இப்ராஹீம் ஜமாலி தம் சிறப்புரையில், இந்திய திருநாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மத நல்லிணக்கம் நிலவுகிற நாடு. இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் சமய வேறுபாடு இன்றி சகோதரத்துவ உணர்வோடு வாழ்வதே நம் தனித்துவம். இணைந்தும், ஒளிர்ந்தும் இந்தியப் பண்பாட்டைப் பலப்படுத்துவதே நமது பலம் என வலியுறுத்தினார்.
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
மௌலானா அல் ஹாபீஸ் எஸ்.நிசார் முகமது பகாவி துவா செய்து இப்தார் விருந்தினை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் குமார், தேர்வு நெறியாளர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், துறை ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
முன்னதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி.ஷகிலாபானு வரவேற்புரை வழங்கினார். நிறைவில் முனைவர் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார். மாணவர் பேரவைத் தலைவர் ச.ஆசிக் டோனி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமயத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு சமய நல்லிணத்திற்குச் சான்றாக அமைந்த்து.












