திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக யோகா தினக் கொண்டாட்டம்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பனிரெண்டாவது உலக யோகா தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆரோக்கியமான முதுமைக்கு யோகா என்கிற பொருண்மையில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், உடற்கல்வித்துறை இணைந்து கல்லூரி மைதானத்தில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற

இந்த விழாவில் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார மைய ஆயுஷ் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஹெலன் கிறிஸ்டில்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ஆம்ஸ்ட்ராங் அரசு வரவேற்புரையாற்றினார். முதல்வர் தம் தலைமையுரையில், ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் நலம் மனநலம் மேம்பட யோகா அவசியம். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவதற்கு யோகா பயனுள்ள விதத்தில் அமையும் என்று கூறினார் தொடர்ந்து மருத்துவர் ஹெலன் கிறிஸ்டில்டா யோகா பயிற்சி வழங்கி யோகாவின்

முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மக்கள் யோகாசனம் செய்வதன் வழியாக தங்கள் உடலின் மேல் உள்ள அழுக்குகளை நீரால் கழுவுவது போன்று உடலுக்குள் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற சிந்தனைகளையும் கழிவுகளையும் வெளியேற்றி சுகமாக வாழ யோகா உதவுகிறது.

யோகா செய்வதன் வழியாக முதியோர் அமைதியான வாழ்க்கை வாழ முடிகின்றது மாணவ மாணவிகள் மனம் ஒருமைப்படுத்தி கல்வியில் சிந்தனைகளை செலுத்தி வளமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்கின்றது. மூச்சுப் பயிற்சி சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகப் பயிற்சிகளை மாணவர்களுக்கு விளக்கமாக செய்து காட்டி பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் தரைப்படை கவசப்படை விமானப்படை கப்பற்படை ஆகிய தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம் உடற்கல்வித் துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். நிறைவில் கேப்டன் வில்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர் அன்பரசு அவர்கள் தொகுத்து வழங்கினார்.












