செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதுகலை உளவியல் ஆலோசனைப் பிரிவின் சார்பில் உலக மனநல தினம் “வாழ்க்கை அனுபவங்களைக் கேட்போம் – உண்மையான குரல்கள், உண்மையான மாற்றங்கள்” (Real Voices, Real Changes) என்ற பொருண்மையில் 24.11.2026 அன்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் த.குமார், துறைப் புல முதன்மையர் அலோசியஸ், உளவியல் துறைத் தலைவர் முனைவர் ஜான் பாலையா மற்றும் உளவியல் ஆலோசகர் அருட்தந்தை ஒய்.எஸ் யாகு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவர் ஷ்யாம் குமார், மனநலத்தின் முக்கியத்துவம் குறித்தும், மாணவி சுமையா மனநலச் சவால்களை எதிர்கொள்வது மற்றும் உளவியல் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும் உரையாற்றினர்.


அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மன உறுதியை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் அணுகுதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ஊக்கமளிக்கும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது மேலும், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனை மற்றும் ஆதரவு பெறுவதன் அவசியம் குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மனநலம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தியவாறு கல்லூரி வளாகத்தைச் சுற்றி விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். மாணவர்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலப் பிரச்சினைகள் குறித்த தயக்கத்தையும் தவறான எண்ணங்களையும் போக்குவதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.












