செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான தொழில்துறை சிறப்பு சொற்பொழிவு!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கணினி அறிவியல் துறை (பணிமுறை-II) சார்பாக “தொழில்துறை சிறப்பு சொற்பொழிவு” எம்.சி.ஏ. வேலைவாய்ப்பு அரங்கில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் த. குமார் அவர்கள் நிகழ்விற்குப் பாராட்டுரை வழங்கினார்.
“எதிர்காலத்தை அரவணைப்போம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் சுகாதாரத் துறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்கிற மையப் பொருள்களில் இந்தச் சொற்பொழிவுத் தொடரில், வெள்ளி விழா கொண்டாடும் முன்னாள் மாணவர்களே சிறப்பு வள ஆளுநர்களாகக் கலந்துகொண்டு தற்போதைய மாணவர்களுக்கு உரையாற்றினர்.

பெங்களூரு வெர்சூர் ஆர்சிஎம்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான திரு. ஜெயசீலன் ஜெயராஜ் சென்னை ‘ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி’யின் மேம்பாட்டுத் தலைவர் திரு. செபஸ்திராஜ், ஆரக்கிள் நிதிச் சேவைகள் மென்பொருள் நிறுவனத்தின் வங்கி தயாரிப்பு ஆதரவு இயக்குநர் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் மண்டலத் தலைவர் திரு. அந்தோணி சேவியர் ஆகியோர் உரையாற்றினார். இந்த நிகழ்வு, தற்போதைய மாணவர்களுக்குத் தொழில் துறையின் தற்போதைய நிலவரங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் முனைவுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதாக அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை (பணிமுறை-II) தலைவர் முனைவர் சு. பிரிட்டோ ரமேஷ் குமார், துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.ரெக்ஸ் சிரில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த முன்னாள் மாணவர் சந்திப்பும், சிறப்புச் சொற்பொழிவும் தற்போதைய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது.














