• Home
  • உலகம்
  • இன்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நான் பயின்ற பணியாற்றிய செலாமா தமிழ்ப்பள்ளியில் உலகத் தாய்தொழிநாள் சிறப்புற கொண்டாடப்பெற்றது.
உலகம்

இன்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நான் பயின்ற பணியாற்றிய செலாமா தமிழ்ப்பள்ளியில் உலகத் தாய்தொழிநாள் சிறப்புற கொண்டாடப்பெற்றது.

Email :208

இன்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நான் பயின்ற பணியாற்றிய செலாமா தமிழ்ப்பள்ளியில் உலகத் தாய்தொழிநாள் சிறப்புற கொண்டாடப்பெற்றது.

இவ்விழா நிகழ்ச்சியைத் திறந்து வைத்து நான் சிறப்புரை நிகழ்த்தினேன்.

விழாவில் மாணவர் படைப்புகளும் சிறப்புற இடம்பெற்றன.

பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்த்திரு கண்ணதாசன் அவர்கள் விழாவுக்குத் தலைமை ஏற்று தலைமையுரை வழங்கினார். பள்ளியின் வாரியத் தலைவர் மேனாள் விரிவுரைஞர் திருஞானசம்பந்தன் அவர்களும் பள்ளி பெற்றோர் ஆசிரியர்  சங்கத் தலைவர் தமிழ்த்திரு விசயகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

தாய்மொழி நாள் வாழ்த்து கூறுவோம்….

தாய் மொழி நாள் வாழ்த்து கூறுவோம் – தம்பி
தனித்தமிழில் பெயரைச்  சூட்டுவோம்

தாய்மொழி நாள் வாழ்த்து கூறுவோம் – தம்பி
தனித்தமிழில் நாளும் பேசுவோம்

தாய்மொழி நாள் வாழ்த்து கூறுவோம் – தம்பி
தனித்தமிழில் என்றும் எழுதுவோம்

தாய்மொழி நாள் வாழ்த்து கூறுவோம் – தம்பி
நற்றமிழில் பொருளைச்  சொல்லுவோம்

தமிழ்மொழியில் அயல்மொழியின் கலப்பை அகற்றுவோம்
தமிழ்மொழியின் கல்விதனைக் குழந்தைக்கூட்டுவோம்

அன்னைத் தமிழ்ச் சிந்தனையை
நெஞ்சில் நாட்டுவோம்
முன்னைத் தமிழ் ஒன்றேநம்
உயிரென்றே
மண்ணில் நாட்டுவோம்…

நாம் நம் மொழியை இழந்தால் நாம் உலகப் பார்வையை இழக்கின்றோம். நாம் தனித்தன்மை மிக்க அடையாளத்தை இழக்கின்றோம். நாம் நம் அறிவுக் கருவூலத்தை இழக்கின்றோம். இப்படிச் சொன்னவர் அக்கிரா யம்மாமோத்தோ என்கின்ற சப்பானியர்.

2010 ஆம் ஆண்டு அந்தமானில் போ மொழி எனும் ஒரு மொழியைப் பேசிய கடைசிப் பெண்மணி போ சரி இறந்து போனார். அவரோடு அவர் மொழியும் இறந்தது.

தென்னாப்பிரிக்காவில் நூ என்கின்ற மொழியைக் கடைசியாகப் பேசிய ஓவுமா அங்கி காசி எனும் பெண்மணி இறந்ததுடன் அவர் மொழியும் அவரோடு மறைந்தது.

அசெர்ண்டினா பாத்தாகோனியாவில் 2019 ஏப்பிரல் மாதம் 4ஆம் நாள் தெவுல்சே எனும் மொழியைப் பேசிய கடைசிப் பெண்மணி டோரா மன்சாடோ இறந்ததுடன் அவர் மொழியும் அழிந்து போனது.
அறிவியலாளர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு மொழி அழிந்து கொண்டிருக்கின்றது என்கிறனர்.

மொழி ஒட்டு மொத்த உலகம் சார்ந்த அறிவின் தேக்கம் என விக்டோரியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஏவா சேய்கோவசுக்கா கூறுகின்றார்.

மொழி அழிந்தால் நாம் அறிவையும் வரலாற்றையும் நம் மண்ணின் தொடர்பையும் இழக்கின்றோம். மொழிகள். உலகத்தோடு பேசுகின்றன. உலகத்தைப் பற்றி பேசுகின்றன.

உலகில் உள்ள 7000 மொழிகளில் 577 மொழிகள் மிக அண்மையில் அழிகின்ற நிலையில் உள்ளன என யுனேசுக்கோ குறிப்பிடுகின்றது.

உலக மயக்கொள்கையும் ஆளும் மொழியாரின் வல்லாதிக்கமும் மொழி அழிவுக்கு ஒரு கரணியம் எனவும் கூறப்படுகின்றது. 1950- 1960 ஆண்டு கால அளவில். உருசியாவில் உருசிய  மட்டுமே கல்விமொழி எனக் கட்டாயப்படுத்தப்பட்ட பொழுது அங்கு வாழ்ந்த பல்லின மக்கள் தங்கள். தாய்மொழிகளை இழக்கலாயினர். உருசிமயக்  கொள்கையால் உருசிய நாட்டுத் துருக்கியர்கள் தங்கள் தாய் நாட்டோடு தொடர்பற்றுப் போயினர்.

உலகில் மொழி அழிவுக்கு இரண்டு கரணியங்களைக் கூறுவர்.

1. மொழிப் படுகொலை
2. மொழித் தற்கொலை

மொழிப் படுகொலை அயலவரால் பிறமொழிகள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட மொழி அழிப்பு.

மொழித்தற்கொலை என்பது சொந்தத் தாய்மொழி மீது அம்மொழி மக்களே இழிவாய்க் கருதிப் புறந்தள்ளி அழிப்பது.

இதில் தமிழர்கள் இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள்…

நாம் நம் தாய்மொழியாம் தமிழை எவ்வாறு காக்கப் போகிறோம்… ?

இரா. திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts