திருச்சி ஜோசப் கல்லூரியில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா 2024 திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு 06.12.2024 வெள்ளிக்கிழமை நேற்று கல்லூரியின் மைய மூலிகை தோட்டம் நாகமங்கலத்தில் சிறப்பாக கொண்டாடியது.

இவ்விழாவில் அருட்தந்தை முனைவர் T சகாயராஜ் சே ச தலைமை தாங்கினார். தமது உரையில் இவ்விழாவினை கொண்டாடுவதின் நோக்கம் இயற்கை சூழலை பேணி பாதுகாப்பதற்கு மரங்கள் அவசியம் மரங்கள் வளர்வதற்கு மண்வளம் அவசியம் இதனை கல்லூரி மாணவர்கள்


புரிந்து கொண்டு தம் சமூகப் பணியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நட்டு பாதுகாக்கும் தொடர் செயலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு கோபிநாத் வனத்துறை அதிகாரி திருச்சி மாவட்டம் அவர்கள் பேசுகையில் காடுகள் நிலங்கள் கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தொடர்புகளையும் பல்லுயிரிகளின் பாதுகாப்பு தான் நம்


சுற்றுச்சூழலின் பாதுகாப்பு என்றும் சூழலின் சீர்கேட்டினால் உயிரினங்களின் அழிவையும், அரிதாகும் உயிரினங்களின் சூழலையும் இதனை பாதுகாக்கும் முயற்சியில் நாம் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு உயிர்களுக்கும் உள்ள உணவுச் சங்கிலி இயற்கை சூழலுக்கு உள்ள தொடர்புகளையும் விளக்கி தற்பொழுது அரிதாகி வரும் உயிரினங்களை பாதுகாக்க நாட்டின் வளத்தை பெருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.


முன்னதாக கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் திரு T பிரான்சிஸ் சேவியர் தமது கருத்துரையில் மண்ணின் அறிவியல் தன்மையையும் அதன் உயிர் தன்மையுள்ள வளத்தையும் பாதுகாக்க ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதையும் நெகிழிகளை பயன்படுத்துவதையும் முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்றும் நாம் வாழும் பூமியினை பாதுகாக்க பல உயிரிகளை பாதுகாத்தால் தான் மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக பூமி விளங்கும் என்று வலியுறுத்தினார்.
திரு ஜெயச்சந்திரன் ஒருங்கிணைப்பாளர் தொடக்க உரையாற்றினார்.
திரு எஸ் லெனின் ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் ஜெயசீலன் நன்றி உரை கூறினார்.

இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி எச் யசோதை கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு வனத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என எண்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட வனத்துறை பரிந்துரை செய்யப்பட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்தும் மரக்கன்றுகளை நட்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.














