இன்று கோல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பிய வகுப்பு சிறப்புற நடைபெற்றது. மாத்திரை குறித்தும் அளபெடை குறித்தும், பாவிலக்கணங்கள் குறித்தும் விளக்கியுரைத்தேன்.

வகுப்பின் தொடக்கத்தில் அரிமா பார்வையாய்த் தொல்காப்பியப் புதிர் நடத்தப்பெற்றது.
ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பில் கலந்து கொண்டு மரபுப்பா வகுப்பினைத் தனித்து நடத்தும்படியும் வேண்டினர்.
தமிழருடைய வரலாற்றுப் பரப்பில், தமிழருடைய மொழியின் வரலாற்றுப் பரப்பில் அதனுடைய தொன்மை மிகுந்த இலக்கண இலக்கிய நூலாக வீற்றிருக்கின்ற ஒரே ஒரு முழுமுதல் நூல் தொல்காப்பியமே. தொல்காப்பியத்துக்கு முந்திய பல நூல்கள் இருந்தனவாக குறிப்புகளிலே காணப்பட்டாலும் , பல சிதறல்களாக அஃதாவது பாடல்களாக அவை தென்பட்டாலும் நம் கைகளிலே இன்றும் தவழ்வது ஒரு தொன்மைமிக்க முழுமுதல் நூல், தொல்காப்பியம் மட்டுமே.

இந்தத் தொல்காப்பியத்தின் வாயிலாகத்தான் தமிழ் இலக்கணங்களை நாம் அறிந்து கொள்கிறோம். இன்று நாம் பயன்படுத்துகின்ற இலக்கணத்தின் தொன்மைமிகு நூலாகப் பற்றுக்கோடாக இருந்து விளங்குவது தொல்காப்பியம் என பல்வேறு விளக்கங்கள் ஆசிரியர்கட்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் பெருமக்கள் இலக்கண இலக்கிய அறிவுடையராய் வல்லமையாளராய் விளங்கினால் மாணவரை வல்லவராய் உருவாக்கலாம் என்பதும் இவ்வகுப்பில் எம்மால் வலியுறுத்தப்பட்டது.
இரா. திருமாவளவன்
