தமிழ்நாடு

கல் மணிகள்!

Email :122

கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் பிரமிளா ரவிச்சந்திரன், முதன்மை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் கல் மணிகள் குறித்து பேசுகையில்,
பழந்தமிழர்கள் மலையும் மலையைச் சார்ந்த இடங்களிலும் மண்ணும் மண்ணைச் சார்ந்த இடங்களிலும் கடலும் கடலைச் சார்ந்த இடங்களிலும் கண்டறியப்பட்ட மணிகளின் மூலப்பொருள்களை சிறுசிறு கட்டிகளாக  உடைத்தெடுத்து சிறு துணுக்குகளாகவும் , சில்லுகளாகவும் மாற்றி மிகச் சிறிய மணிகள் செய்யுமளவிற்கு கட்டிகளாகப் பிரித்தெடுத்தனர். இத்தகைய சில்லுகளில்

பல  ஒழுங்கற்றவை பயனற்றவையாக ஒதுக்கப்படுகின்றன. நேர்த்தியான சில்லுகளிலிருந்து மட்டுமே கல்மணிகள் தேவையான வடிவ அமைப்பில் உருவாக்கப்பட்டன. இத்தகைய கரடுமுரடான மணிகள் சங்ககாலத்தில் ஒரு பானையில் இடப்பட்டு அப்பானையின் வாய் இதே வகைக் கல்லாலே இறுக மூடப்பட்டுச் சூட்டடுப்பில் வைக்கப்படுகிறது. பானையின் வாய் மணிகளின் மூலப்பொருளான கால்சிட்னி கல் மூலம் இறுக்கமாக மூடப்படுவதற்குக் காரணம், பானைக்குள் இருக்கும் சூடு பானையின் வாயிலுள்ள இடைவெளியினால் வெளிச் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்திப் பானையினுள் ஒரே சீரான வேற்று வண்ணம் கிடைக்க வழிவகுத்தன. சில நேரம் முதல் கட்டத்தில் உள்ள மணிகள் கொண்ட பல பானைகள் ஒரே நேரத்தில் இதுபோல வரிசையாக வைக்கப்பட்டு மந்தமான சூட்டில் வைக்கப்படுகின்றன. பொருந்தல் அகழாய்வில் பாசிகள் செய்யப் பயன்படும் உலைகள் காணப்படுகின்றன என்பர். இன்றையக் காலகட்டத்தில் சில்லுகளாக உடைத்தெடுக்கப்பட்ட மணிகளை  வட்ட வடிவமான குறடு போன்ற கருவியில் தேய்ப்பர் பின்னர் இரும்பினால் ஆன குச்சி போன்ற வடிவம் கொண்ட ஒரு கருவியின் துணைகொண்டு அதில் அரக்கினைத் தேய்ப்பர். அவ்வரக்கில் சில்லுகளாக உடைத்தெடுக்கப் பெற்ற மணிகளை வைத்து கல்லினால்ஆன அடுப்பில் வைத்து மெருகேற்றுவர். சில நேரங்களில் முற்றிலும் முடிவுபெறாத மணிகளும் இதேபோல வண்ண மாற்றத்திற்காக அடுப்பில் வைக்கப்படுகின்றன.  கண்ணாடி மணிகள் சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் வட்டம், அறுகோணம், இரு கூம்பு வடிவங்களில் காணப்படுகின்றன. கல்மணிகள் கார்னீலியன், வரியுள்ள அகேட், பளிங்குக் கற்களால் செய்யப்படுகின்றன. இம்மணிகள் நன்றாகத் தேய்க்கப்பட்டு வழவழப்புக் கொடுப்பதற்குத் துளைகள் இடப்பட்டுள்ளன. மணிகளின் இரண்டு பக்கங்களிலிருந்தும் துளைகள் இடப்பட்டிருக்கின்றன. இதனால் சில மணிகளில் நேராகச் சந்திக்காமல் இரண்டு பக்கத் துளைகளும் வெவ்வேறு கோணத்தில் நிற்கும். இவ்வாறு மணிகளைச் சரியாகத் தெரிவு செய்வோர் வண்ணக்கன் குயினர், என்றும் அம்மணிகளுக்குத் துளையிடுவோரைத் திருமணிக்குயினர், என்றும், அரக்கு குறுந்தம் கொண்டு இறுதியில் மணிகளுக்கு மெருகேற்றும் தொழிலைச் செய்வோர், சிறுகாரோடர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சங்ககாலத்தில் குயினர், என்பவர்கள் மணிகளைத் துளையிடுபவர்களாகவும், தையற்காரர்களாகவும், மணிகளைப் பதிக்கும் தொழில் புரிந்தோராகவும் காணப்பட்டனர். தமிழகத்தில் ஏராளமான மணிகளும், சூதுபவளக் கற்களும், அறுத்த நிலையிலும், துளையிடத் தயார் நிலையிலும், மெருகேற்றிய நிலையிலும் என பல்வேறு நிலைகளில் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு விதமான மணிகள் தயாரிக்கும் தொழிற் கூடங்கள் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும். இதற்குக் கொடுமணல் அகழாய்வு சிறந்த சான்றாகக் காணப்படுகின்றன. கொடுமணலில் வட்ட வடிவம்,
பீப்பாய் வடிவம்,இருகூம்பு வடிவம்,
கோள வடிவம் என கண்டறியப்பட்டன.
இவ்வகை மணிகளில் மிகுதியானவை வெள்ளைநிற அலங்காரக் கோடுகளைக் கொண்டுள்ளன. வட்ட வடிவமான முதல்வகை மணிகள் பொதுவாக 8 மி.மீ. சுற்றளவு கொண்டவையாகவும், சிறிய மணிகள் 5 மி.மீ. சுற்றளவும், பெரிய மணிகள் 12 மி.மீ. சுற்றளவும் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இம்மணிகளின் தடிமன் 2.3 மி.மீ. அளவுடையனவாக உள்ளன. இவ்வகை மணிகள் இருபுற விளிம்புகளிலும் எளிமையான, வெள்ளை நிற அலங்காரக் கோடுகளைக் கொண்டுள்ளன.  பண்டைய தமிழர்கள் மூலப்பொருட்களை அணிகலன்களாக மாற்றும் போது ஏற்படுகின்ற கழிவின் வடிவங்களை பல இடங்களில் வரலாற்று எச்சங்களாக உள்ளன. ஏனெனில் அனைத்து விதமான கற்களையும் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்ற இயலாது. இன்றும் கரூர், காங்கேயம், கொடுமணல், ஊஞ்சலூர் போன்ற பகுதிகளில்

பல்வேறுவித வடிவங்களைக் கொண்ட மணிகற்கள் காணப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கார்னீலியன் (சூதுபவளம்) கல்மணிகள் பல வடிவங்களில் நிறையக் கிடைத்துள்ளன.  மணிகளைச் சங்ககால மக்கள் உண்கலன்களில் பதித்துள்ளனர். இதனை மணிசெய் மண்டை (புறம். 105: 5) எனும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன. மேலும் தோலினாலான ஆடைகளிலும் மணிகளை வைத்துத் தைத்து அழகு செய்துள்ளனர். பின்னர் பொன்னால் ஆன அணிகலன்களிலும் காதணி, கழுத்தணி, விரலணி எனப் பலவகைகளில் மணிகளை இணைத்துத் தொழில்களை மேம்படுத்தினர். இவை மட்டுமல்லாது மணிகள் நாணயங்களாகவும், இரும்பு, செம்பு போன்ற உலோகங்களுடனும் இணைத்துப் புலங்கு பொருட்களாகவும், ஆடம்பரப் பொருட்களாகவும் செய்யப்பட்டன. எனவே இவ்வித மணிகளின் மூலப்பொருட்களானது மணிகள் செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, இரும்பு, தோல், பொன், செம்பு, கண்ணாடி போன்ற பொருட்கள்

செய்வோருக்கும் பயன்பட்டுள்ளன. அரிக்க மேட்டில் மணிகள் செய்யும் தொழிற்கூடங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பகுதியில் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு மெருகேற்றி மணியாக்கியமையினையும், சங்கு அணிகலன்கள் செய்தமையினையும். சங்ககால நாணயங்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அரிக்க மேட்டுப்பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதால், பண்டையக் காலத்தில் மணிகளை உருக்கிக் காய்ச்சித் துளையிட்டுத் தூய்மை செய்யும் தொழிற் கூடங்கள் இப்பகுதியில் உருவாகியுள்ளன. இப்பகுதியில் மேலும் நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்புமணி மிகுதியாகக் கிடைத்துள்ளன.  நீலகிரியிலிருந்து இளஞ்சிவப்பு, நீலக்கல், அழகன் குளத்திற்குக் கொண்டு வரப்பெற்று அழகு மணிக்கற்களாகப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றுள்ளன. மேலும் அப்பகுதியில் கார்னீலியன் மணிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பூனைக்கண் மணிகள், மணி உருக்கும் சட்டங்கள், கோமேதகக்கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், நீலக்கல், வைரம், மாணிக்கம், சிவப்புக்கல் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. கொங்கு நாட்டு அகழாய்வில் கடல்நீலப் பச்சைக்கல் தோண்டியெடுக்கப்பெற்றுள்ளது.
சங்ககாலத்தில் புன்னாடு என்னும் ஊரில் கோமேதகக் கற்கள் கிடைத்துள்ளன.  தமிழ்நாட்டில் விளைந்த மணிக்கற்களைத் தவிரத் தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்குப் பலவகை மணிக்கற்கள் கொண்டுவரப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மணிக்கற்களில் சிவப்புக்கல் வகை உயர்ந்த விலையைக் கொண்டது. அக்கல்லும் கொங்கு நாட்டில் பெருமளவில் கிடைத்துள்ளது. அக்கற்களை மணிகளைச் செய்து விற்றனர். திருக்காம்புலியூர், அழகரை, கரூர், உறையூர், அழகன்குளம், அரிக்கமேடு, கொடுமணல் முதலிய ஊர்களில் சிவப்புக்கல் மணிகள்

கிடைத்துள்ளன.கொங்குநாட்டிலும், தமிழகத்திலும் ஊதாநிறக்கல் அதிகளவில் கிடைத்துள்ளன. அக்கற்கள் சிந்துவெளி நகரங்களிலிருந்து மெசபடோமியோ முதலிய மேற்காசிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றுள்ளன. பண்டைத் தமிழகத்தில் சேலத்திலும், மலையாளத்திலும் காவிரிப் படுகையிலும் நீலக்கற்கள் கிடைத்துள்ளன.  கொங்கு நாட்டில் கொடுமணல் என்னும் பேரூர் கல்மணிகள் உற்பத்தி செய்யும் பெரும் களமாக விளங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மணிகள் அயல்நாட்டினரால் பெரிதும் போற்றப்பட்டு அணியப்பெற்றன. இவ்வித அணிகலன்கள் கொடுமணலில் நடந்த அகழாய்வின் போது ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீலமணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக்கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக்கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன என்றார். கல்வி ஆலோசகர் சந்திரசேகர தவே சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிவியல் விழாவில் பங்கேற்றவர்களுக்கும் நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த நாணய சேகரிப்பாளர்கள் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் குணசேகரன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலருக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts