
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா!
புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி மாவட்ட ஆட்சியர் திறப்பு.


முக்கடல் சங்கிமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழாவினை முன்னிட்டு திருக்குறளைப் பரப்பும் வகையில் புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், வினாடி வினா ஆகிய நிகழ்ச்சிகளை டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டத்துடன் இணைந்து 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.





முதல் நிகழ்வாக 23ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் அய்யன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் சம்பந்தப்பட்ட ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார் திறந்து வைத்தார்.




கண்காட்சியில் திருக்குறள் கருத்துகளை பிரதிபலிக்கும் வண்ணம் திருச்சி டிசைன் ஸ்கூல் மாணவர்கள், ஓவியர் கலைச்செல்வன், ஓவியர் ரவிலெக்ஸ் ஆகியோர் வரைந்திட்ட பல்வேறு கண்கவர் வண்ண திருக்குறள் தொடர்பான ஓவியங்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.





அகழ் அமைப்பு நிறுவனர் தமிழ்ச்செம்மல் வினோதினி திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு, 133 கதாசிரியர்களைக் கொண்டு எழுதப்பட்ட 1330 சிறுகதைத் தொகுப்புகள் அடங்கிய 7 அடி உயர திருக்குறள் தொகுப்பு நூல் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது.
திருக்குறள் சம்பந்தப்பட்ட பல்வேறு நூல்கள் திருக்குறளுக்கு தமிழ் அறிஞர்கள் பலர் எழுதியுள்ள உரை நூல்கள் வழி நூல்கள் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் ஒவ்வொன்றையும் பார்த்து மகிழ்ந்தார். இவ்விழாவில் கவிஞர் நந்தலாலா, வாசகர் வட்டத் தலைவர் வீ. கோவிந்தசாமி, தமிழ் சங்கம் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் திருக்குறள் ஆர்வலர்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் போட்டித்தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



இக்கண்காட்சி மாவட்ட மைய நூலகத்தில் 31ஆம் தேதி முடிய நடைபெறும்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.



















