முதியோருக்கான டிஜிட்டல் மற்றும் நிதியியல் மோசடி தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் நடத்தியது!
திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், “முதியோருக்கான டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வித் திட்டத்தின்” ஐந்தாம் நாள் நிகழ்ச்சி 14.10.2026 இன்று காலை 10.30 மணியளவில் திருச்சி பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை மையத்தில் நடைபெற்றது.


ஐந்து நாட்கள் நடைபெற்ற இத்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, “இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல், நிதியியல் மோசடிகளைத் தடுப்பது” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், பாவை அறக்கட்டளையின் கண்காணிப்பாளர் திரு. C. தினேஷ் பாபு வரவேற்புரை வழங்கினார்.


திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமை உரையாற்றினார்.
சிறப்பு வள நபராகக் கலந்து கொண்ட போதி மல்டிவர்ஸ் யுகே (Bodhi Multiverse UK), நுண்ணறிவு.AI (Nunnarivu.AI), போதி கிரீன்ஸ் மற்றும் ப்ரோஃப்ரண்ட் யுகே நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் இயக்குநர் திரு. அனந்த கணேஷ், MSIT, MSCNS (UK), முதியோருக்கு இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல், நிதியியல் மோசடிகளைத் தடுப்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.


இணையவழிப் பணப்பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக மேற்கொள்வது, போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடைபெறும் மோசடிகளை அடையாளம் காண்பது, வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ரகசிய எண்களைப் பாதுகாப்பது குறித்து முதியோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


மேலும், இணையவழி மோசடிகளால் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் முதியோர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத்


தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பெற்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில், திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மகளிர் அதிகாரமளித்தல் மையத்தின் பாலின நிபுணர் திருமதி S. மெஹருன் நிஷா நன்றியுரை வழங்கினார்.


முதியோரின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நிதியியல் மோசடிகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
















