செயின்ட் ஜோசப் கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு முகாம்!
செயின்ட் ஜோசப் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன்களையும் ஆளுமைத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.
கல்லூரியின் நூலக அரங்கில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தொடங்கி வைத்தார்.
இணை முதல்வர் முனைவர் த.குமார், வேலைவாய்ப்பு மைய இயக்குநர் முனைவர் ம.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) திருச்சி மண்டலத் தலைவர் ஜெயம் ஆனந்த், வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவன விற்பனைப் பிரிவின் பொது மேலாளர் திரு. எம். பிரேம் சந்த் ஜமாத், ஹெவி இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம். கார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
எண்முறைத் திறன் மற்றும் கணிதத் திறன் சார்ந்த பயிற்சிகள், எண் முறைகள், சதவீதம், இலாபம் மற்றும் நட்டம், விகிதம், சராசரி, காலம் மற்றும் வேலை, வேகம் மற்றும் தூரம், தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி, தரவு விளக்கம், ஆங்கில மொழி மற்றும் தொடர்புத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கினார். சொற்களஞ்சியம், இணைச்சொற்கள், எதிர்ச்சொற்கள், ஒருசொல் மாற்றீடு, இலக்கணம், வாக்கிய அமைப்பு, காலங்கள், வாசிப்புப் புரிதல், வாக்கியத் திருத்தம் மற்றும் பத்தி வரிசைப்படுத்துதல் போன்ற தலைப்புகளில் ஜியாவுதீன் பத்மா சுதா, விஜயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், தலைமை தாங்கினார்.
அவர் தம் தலைமையுரையில், வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஒருமுறை பயிற்சி மேற்கொள்வது மட்டும் போதாது என்றும், மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்து தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முகாமில் கற்றுக்கொண்டவற்றைத் தங்களுடைய அன்றாட முயற்சிகளில் தொடர்ந்து செயல்படுத்துவதுடன், தங்களுடன் பயிலும் சக மாணவர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேலைவாய்ப்பும் ஆராய்ச்சியும் முக்கிய முன்னுரிமைகள் என எடுத்துரைத்தார்.
முகாமில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்த பயிற்சி, அனுபவங்கள் மற்றும் கற்றல் வாய்ப்புகள் பயனுள்ளதாக இருந்ததாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து, முதல்வர் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். முகாமின் ஏற்பாட்டாளர் முனைவர் அ. விமல் ஜெரால்டு நன்றியுரை வழங்கினார்.














