இன்று கப்பலா பத்தாசு பெத்தாக் படின் நிகழரங்கில் மணமக்கள் மருத்துவர் சரவணப் பிரியனுக்கும் மருத்துவர் யோகமதிக்கும் தமிழ் மறையாம் திருக்குறள் ஓதி வாழ்வியல் விளக்கங்கள் செய்து இனிதே தமிழ்த்திருமணம் நடத்தி வைத்தேன்.

தலைமகனும் தலைமகனும் ஒருவருக்கு ஒருவர் உரிமையானவர் எனும் பொருளில் கிழவன் கிழத்தி எனப் பண்டைநாள் இலக்கியம் கூறும். தலைவன் தன் தலைவியை நெஞ்சாங்குலை ( இருதயம்) போல் எண்ணிப் போற்ற வேண்டும் அதே போல் தலைவியும் தலைவனுக்கு அவர்தம் நெஞ்சாங்குலையாய் விளங்குதல் வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பால் பிணைந்து சொல்லாலும் செயலாலும் போற்றிப் புரத்தல் வேண்டும்; ஒருபோதும் கடிந்து பேசுதல் கூடாது.. வருந்தலைமுறையைத் தமிழறிந்த தமிழாய்ந்த தமிழுணர்ந்த தமிழுக்கான தலைமுறையாய்த் தமிழ்ப்பெயர் சூட்டி, தமிழ்க்கல்வியூட்டி வளர்த்தெடுக்க வேண்டும் எனக் கூறி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்தினேன்.

திருமணம் நிறைவுற்றதும் அன்பர் சிலர் எனை நாடி பெரிதும் போற்றியும் பாராட்டியும் இவ்வாறான தமிழ்த்திருமணம் பல்கிப் பெருக வேண்டும் எனவும் தம் பிள்ளைகட்கு இவ்வாறே தமிழ்த்திருமணம் புரிவோம் எனக் கூறியும் மகிழ்ந்தனர்.
வெல்க திருக்குறள் தமிழ்த்திருமணம்!
இரா. திருமாவளவன்.













