• Home
  • தமிழ்நாடு
  • யோகன் ராச், தர்சினி இணையருக்குத் தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி அனைவருக்கும் விளங்கும் வகையில்  நற்றமிழில் விளக்கம் செய்து இனிய தமிழ்த்திருமணத்தை நடத்தி வைத்தேன்.
தமிழ்நாடு

யோகன் ராச், தர்சினி இணையருக்குத் தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி அனைவருக்கும் விளங்கும் வகையில்  நற்றமிழில் விளக்கம் செய்து இனிய தமிழ்த்திருமணத்தை நடத்தி வைத்தேன்.

Email :97

இன்று சிரம்பானில் சிட்டி கிங்டம் விடுதி அரங்கத்தில் யோகன் ராச், தர்சினி இணையருக்குத் தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி அனைவருக்கும் விளங்கும் வகையில்  நற்றமிழில் விளக்கம் செய்து இனிய தமிழ்த்திருமணத்தை நடத்தி வைத்தேன்.

நற்றிணைப் பாடல் காட்சி ஒன்றினையும் குறுந்தொகைப் பாடல் உணர்த்தும் செய்தியையும் இத்திருமணத்தில் விளக்கினேன்.

தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நட்பின் மாண்பினையும் தலைவனின் சிறப்பையும் விளக்கும் பாடலே நீடு தோன்று இனியன் என்பதாகும். தேனீ, தேன் தொடுக்க உயர் தாமரை மலரை நாடுகின்றது. அதினின்று தேனெடுத்து உயர்ந்த மலைக்குச் செல்கின்றது; அந்த உயர்ந்த மலையில் மணமிக்க சந்தன மரத்தைத் தேர்ந்தெடுத்து அதில்  தேன் தொடுக்கின்றது. அந்தத் தேனின் தூய்மையைப் போலவும் உயர்வைப் போலவும் இனிமையைப் போலவும் தலைவனுக்கும் தனக்கும் உள்ள நட்பு தூய்மையானது என்கிறாள் தலைவி. தாமரை தண் தாது ஊதி மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன் போல புரைய மன்ற புரையோன் கேண்மை என்பதே அந்த நற்றிணைப் பாடல். 

இந்தத் திருமணத்தால் இரண்டு மணங்கள் மட்டுமல்ல இரண்டு குடும்பங்களும் பேருறவாகின்றன.

யாயும் ஞாயும்
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

என்பது குறுந்தொகைப் பாடல் , என் தாயும் உன் தாயும் யாரோ, என் தந்தையும் உன் தந்தையும் எவ்வழியில் உறவினர்? எங்கோ உள்ள நீர் ஆவியாகி முகிலாகி பிறிதோரிடத்திற்குச் சென்று மழையாகப் பொழிந்து அவ்விடத்தில் உள்ள செம்மண்ணோடு கலக்கின்றது ; மண்ணும் நீரும் இரண்டறக் கலந்து இயைந்து விடுகின்றன. அது போல இவ்விருவரின் உறவும் இவ்விருவரின் குடும்பங்களின் உறவும் இந்தத் திருமணத்தால் கலந்து ஓருறவாகிவிடுகின்றது.

அருள் எல்லா உயிர்கள் மீதும் செலுத்தும் பேருணர்வு. அன்பு பொதுவாயினும் மாந்தன் மாந்தன் மீது கொள்வது அன்பாகும்; உறவினர் தமக்குள் கொள்வது பாசம். பசை போல் ஒட்டுவது பாசம் .. மணமக்கள் அருளும் அன்பும் பாசமும் கொண்டு வாழ்வைச் சிறக்கச் செய்தல் வேண்டும் என மேலும் பல  விளக்கங்களை வழங்கி இத்திருமணத்தை இனிதே நடத்தினேன். 

மணமக்களின் பெற்றோரும், உற்றார்வினர்களும் ஏனையோரும் திருமணம் மிகச் சிறப்பு, எங்கள் மனம் நிறைந்தது; உவந்தது ; அறஞ்சார் வழியால் தூய் தமிழால் குளிர்ந்தது  என்றனர். எம் பிள்ளைகளுக்கும் இவ்வாறே திருக்குறள் ஓதி மணம் புரிய நினைத்துள்ளோம் என்றனர். இவ்வாறே புரியும் வண்ணம் இனிய தமிழில் திருமணம் நடத்துதல் வேண்டும் என்றனர் சிலர். இதுவே தாம் காணும் முதல் திருக்குறள் தமிழ்த்திருமணம் என்றும் தம்மைப் பெரிதும் ஈர்த்து விட்டது என்றும் சிலர் கூறினர். தமிழ் நாட்டின் நாமக்கல் பகுதியினின்று வருகையளித்த குடும்பத்தாரும் திருமணத்தைக் கண்டு பெரிதும் உவப்பெய்தி இத்திருமணம் மிகச் சிறப்பு என்றும் தாம் நெகிழ்ந்து விட்டதாய்க் கூறிப் போற்றினர்.

நான் எண்ணிய முறையில் திருக்குறள் வழி தமிழ்த்திருமணம் மக்களைப் படிப்படியாய்ச் சென்றடைவதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்; இன்னும் இன்னும் செய்தற்குரிய பணிகள் உள்ளனவே என்பதை எண்ணியும் ஆழ்ந்தேன்; முடுக்குற வினைபட விரைந்தேன்.

மணமக்கள் தம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!

இரா. திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts