• Home
  • தமிழ்நாடு
  • தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்த சிறப்பு சொற்பொழிவு
தமிழ்நாடு

தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்த சிறப்பு சொற்பொழிவு

Email :102

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

யோகா ஆசிரியர் விஜயகுமார் தமிழர் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி குறித்து பேசுகையில், பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. குழிகளில் கற்களை எடுத்து விளையாடும் போது விரல்களுக்கு பயிற்சி கிடைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் நுண்ணிய கணிதத்திறன் அதிகரிக்கிறது. அறிவுத்திறனும், வாய்ப்புநிலை இயல்பும் இவ்விளையாட்டில் காணப்படுகிறது.

பல்லாங்குழி உடல் ரீதியாக பெண்ணின் விரல் மற்றும் கைகளுக்கு வலுச் சேர்க்கிறது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு, சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுதல் அவசியம். மேற்சொன்ன அனைத்தையும், விளையாட்டின் வழியே பெண்களின் மனதில் பதிய வைக்க, நம்முன்னோர்கள் கண்டறிந்த பல்லாங்குழி விளையாட்டில் உள்ளது.

திருமண நாளன்று மாலையில் மனைவி பல்லாங்குழி விளையாடுவதைப் பார்த்து, அப்பெண்ணின் நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறமை, வீட்டின் நிதிநிலையை சமாளிக்கும் திறன், சிக்கனம், மதி நுட்பம் ஆகியவற்றை கணவன் அறிந்து கொள்கிறார்.

பல்லாங்குழியென்பது பண்ணாங்குழி, பன்னாங்குழி, பள்ளாங்குழி, பதினாங்குழி, பரலாடும் குழி, பாண்டி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. பல அழகிய குழிகளை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆட பெறுவதால் (பல+ஆம்+குழி=பல்லாங்குழி) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கிராமத்தில் நெல்க்குத்துவதற்காக தோண்டப்படுகின்ற சிறுபள்ளத்தை பண்ணை என்று கூறுவதுண்டு. அதைப் போலவே சின்ன பள்ளம் தோண்டி கற்களையிட்டு ஆடுவதால் ‘பண்ணாங்குழி’

எனப்படுகின்றது.பள்ளம்+குழி எனப்பிரித்தால் பூமியில் பள்ளம் தோண்டி குழியாக்கி கற்களை இட்டு விளையாடப்படுவதால் ‘பள்ளாங்குழி’ என வழங்கப்பட்டிருக்கலாம். பதினான்கு குழிகள் இருப்பதால் பதினாங்குழி எனப் பட்டிருக்கலாம். 

மேலும் ‘முத்து’ என்பதற்கு ‘பரல்’ என்றும் பொருள் உன்டென்பதால் பரலாடும் குழி என்று மாறியிருக்க்கலாம். இவ்விளையாட்டிற்கு பாண்டியாட்டம் என்ற பெயரும் உண்டு.

பல்லாங்குழி விளையாட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் பெரும்பாலும் பெண்கள்தான் அதிகம் விளையாடுகின்றனர். பல்லாங்குழி கல், மரப் பலகை, உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் பாறைகளிலும், தரைகளிலும் குழிகள் பறித்து பல்லாங்குழி விளையாடி உள்ளனர். 

இது இரண்டு நபர்கள் விளையாடும் விளையாட்டு. பல்லாங்குழியில் மொத்தம் பதினான்கு குழிகள் இருக்கும். ஒருவருக்கு ஏழு குழிகள் என்று பிரித்து எதிரெதிரே அமர்ந்து ஆடுவார்கள். இந்த ஆட்டத்திற்கு புளியங்கொட்டை அல்லது ஏதேனும் விதைகளை காய்களாகக் கொண்டு விளையாடுவார்கள். ஒரு குழிக்கு ‌ஐந்து காய்கள் வீதம் நிரப்பி வைப்பார்கள். ஒவ்வொரு பக்கமும் முப்பத்தைந்து காய்கள் என எழுபது காய்கள் விளையாட்டில் பயன்படுத்தப்படும்.முதலில் ஆட்டத்தை தொடங்குபவர் தன் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு குழியில் இருந்து காய்களை எடுத்து வலது புறமாக அடுத்தடுத்த குழிகளில் குழிக்கு ஒரு காய் வீதம் போடுவார். கையில் இருக்கும் காய்கள் முடிந்ததும், அடுத்தக் குழியில் இருக்கும் காய்களை எடுத்து தொடர்ந்து அடுத் தடுத்த குழிகளில் போட்டுக்கொண்டே வருவார். கையில் எடுத்த காய்கள் முடிந்து, அடுத்தக் குழியில் காய்கள் எதுவும் இல்லை என்றால், அதற்கு அடுத்தக் குழியில் இருப்பதை சொத்தாக எடுத்துக் கொள்வார். காலியான குழிக்கு அடுத்தக் குழியும் காலியாகவே இருந்தால் எதுவும் கிடைக்காது. 

பின்னர் எதிரே இருப்பவர் ஆட்டத்தை தொடர்வார்.

இவ்வாறு மாறிமாறி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, இடையிடையே வெற்றுக் குழியில் ஒவ்வொரு காயாக விழுந்து, நான்கு காய்கள் சேர்ந்தால் அந்த குழிக்குரியவர் அதனை முத்து அல்லது ‘பசு’ என்று கூறி எடுத்துக் கொள்வார். சொத்து, பசு என்று எடுத்தபடியே, பல்லாங்குழியில் இருக்கும் காய்கள் காலியானதும், இருவரும் தங்களில் இருக்கும் காய்களை கொண்டு மீண்டும் குழிகளை நிரப்புவர். அப்போது ஒருவரிடம் அதிக காய்களும், இன்னொருவரிடம் குறைவான காய்களும் இருக்கும். 

பதினைந்து காய்கள் குறைவாக கிடைத்தது என்றால் தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளை தக்கம் என்ற பெயரில் காலியாக விட்டு விட்டு, மற்ற குழிகளில் காய்களை நிரப்பி ஆட்டத்தை தொடர்வார். தக்கம் என்ற குழியில் எதிரே விளையாடுபவர் காய்களை போட மாட்டார்.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது, அவர் கையில் எஞ்சி இருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய 5 கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒரு காயை இட்டு ஆட்டம் தொடரும். அதற்கு ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் நிர்கதியாகி நிற்கின்றபோது தான் ஆட்டம் முற்றுப் பெறுகிறது. இந்த ஆட்டத்தின் மூலம் நினைவாற்றல் பெருகும். மனதை ஒருநிலைப்படுத்த முடியும். 

மனதில் இருக்கும் கவலைகள் மறந்து மகிழ்ச்சி பொங்கும். விரல்களால் தொடர்ந்து விளையாடும் பொழுது இரத்த ஓட்டம் அதி கரித்து, உடலும் உற்சாகமாக இருக்கும். தொடர்ந்து விளையாடும் போது பொழுது போவதே தெரியாது. உறவுகளையும் மேம்படுத்தும் என்றார்.

திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அபிஷேக், அனு பிரியா, அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர் குமார், கிஷோர், சஞ்ஜய்குமார், லோகேஷ்வரன், உதயகுமார், நரேஷ் பாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts