திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

தஞ்சை காசிநாத் வானூர்தி தாங்கிக் கப்பல் தலைப்பில் அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி பேசுகையில், வானூர்தி தாங்கிக் கப்பல் அல்லது விமானம் தாங்கிக் கப்பல் என்பது வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக்கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், கடற்படை போர் விமானங்களின் தாக்குதல் தூரத்தை அதிகப்படுத்தவும், எதிரி நாட்டு கடற்படையை இடைமறிக்கவும் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன.

அவ்வகையில் இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட இந்திய வானூர்தி தாங்கிக் கப்பல் நினைவார்த்த அஞ்சல் தலை மற்றும் மேக்சிம் அஞ்சல் அட்டையுடன் கூடிய முத்திரையினை காட்சிப்படுத்தி விளக்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் தாமோதரன், மகாராஜா, ரமேஷ், மாதவன், முகமது சுபேர், சந்திரசேகரன், சிவகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












