தமிழ்நாடு

வருக! வருக!
இருபத்தைந்தே!

Email :133

இதயவானில் சிறகுவிரித்து
எண்ணப்பறவை பறக்கிறது; அது
உதயகால உறவைஎண்ணி
உள்ளம்தேடி அலைகிறது
பரந்துவிரிந்த அண்டவெளியில்
பார்க்கும் இடமெல்லாம் சிரிக்கிறது!
பச்சைப் புல்வெளி
பசுமரங்கள்!
இச்சைக்கொண்ட இளங்கிளிகள்!
கச்சைக் கட்டிய கன்னியர்கூட்டம்!
துள்ளிஓடும் மான்கள்!அருவிகள்!
வெள்ளிமணியாய்
புள்ளின ஒலிகள்!
அள்ளிஅணைக்கத்
தூண்டும் அழகுடன்
பள்ளிகொள்ள
உள்ளம் துடிக்கும்
புதுமண இணையர்கள்!
பார்க்கப் பார்க்க
பரவசம்! பரவசம்!
எங்கும் இன்பத்தின்
பொங்கும் பிரவாகம்!
எல்லோர் முகத்திலும்
ஓங்கும் ஒளிவெள்ளம்!
என்னே! என்னே!
என்னரும் மக்களின்
மின்னல் பேச்சு!
மெய்நிகர் வீச்சு!

இதுதான் வேண்டும்!
இன்றும்! என்றும்!
பொதுநிலை விதியாய்
புவியில் மலர்நது
புன்னகை முகங்கள்
புத்தம்புது மலராய்
எங்கும் தெரிய
இங்கிந்த புத்தாண்டு
வழிகாட்ட வேண்டும்
ஒளியூட்ட வேண்டும்!
வருக ! வருக!
இருபத்தைந்து
இளங்காளையே வருக!
வளங்களும், நலங்களும்
வற்றாது பெருக
வழிகள் செய்க!
சிந்தையும், செயலும்
செம்மையாய் மிளிர
சிந்தனைக் கதவினைத்
திறந்து விடுக!
நல்லன எங்கும்
நறுமணம் வீசட்டும்!
கொள்வன கொடுப்பன
குறுநகை புரியட்டும்!
எல்லாரும் எல்லாமும்
கொள்ளாது பெற்று
நல்லோராய் நாட்டில்
வாழ்ந்து சிறக்கட்டும்!

ஊறும் உணர்வுடன்
உறவென்ற மனதுடன்
உங்களில் ஒருவனாய்
வாழ்த்தி வணங்கும்:
வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி.20.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts