திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலம் கல்லூரி இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் இராச்சாண்டார் திருமலை ஊராட்சிக்குட்பட்ட கீழப் புதுப்பட்டி கிராமத்தில் பொங்கல் தின விழா சிறப்பாக நடத்தினர்.

இவ்விழாவில் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் சலேத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையில் பொங்கல் விழா தமிழர்கள் வாழ்வியலோடு இரண்டற கலந்துள்ளதை பல்வேறு உதாரணங்களோடு விளக்கினார். விரிவாக்கத்துறையின் மூத்த ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் முற்றத்தின் நிறுவனர் மெர்சி மாணவர்களோடு சேர்ந்து இனிப்பு பொங்கல் உணவு செய்து அனைவருடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் மாணவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினார். இவ்விழாவில் மாணவப் பிரதிநிதி மோனிஷ் மற்றும் ஜெயசூர்யா உட்பட சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் அனைவருக்கும் பொங்கல் உணவு வழங்கப்பட்டது.













