நூல் வரிசை -04
நூல் – ஆமை அத்தை ஆமை அத்தை
(சிறார் பாடல்கள்)
ஆசிரியர் – கார்த்திகா கவின்குமார்
வெளியீடு – நிவேதிதா பதிப்பகம்
விமர்சனம் : தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருத்தாளர் எழுத்தாளர் உமையவன்.

அண்மையில் நிவேதிதா பதிப்பகம் வெளியிட்ட 31 சிறுவர் நூல்களில் ஒன்று.
சிறார் படைப்பிலக்கியத்தில் முக்கியமான ஒன்று சிறார் பாடல்கள். படிப்பதற்கு எளிமையாக உள்ள பாடல்களை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. மிக நுட்பமாக, எளிமையாக, இனிமையாக சொற்களை தேர்வு செய்து பாடல்கள் புனையப்படுகின்றன.
எளிமையாக சொல்வதென்றால் சிறார் பாடல் என்பது சொற்களின் கூட்டமைப்பு. அது பொருள்களின் மாநாடு அல்ல. சிறார் பாடல்களில் தத்துவத்தையோ, ஏதாவது பொருளையோ, கருத்தையோ எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். அது குழந்தைகளுக்கு சொற்களை அறிமுகப்படுத்தும் ஒரு எளிய யுக்தி அவ்வளவே.
பாடல்களைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் மரபுக் கவிதையாகவும், கொஞ்சம் தளர்த்தினால் புதுக்கவிதையாகவும் மாறிவிடும் ஆபத்து உண்டு. மிக மிக எளிய சொற்களைக் கொண்டு கட்டப்படும் அழகிய கோட்டைதான் சிறார் பாடல்கள்.
இப்படிப்பட்ட சிறார் பாடல்கள் இந்நூலின் ஆசிரியர் கார்த்திகா கவின்குமார் அவர்களுக்கு மிக எளிமையாக கைவந்துள்ளது. எளிய சொற்களில் இயல்பாக பாடல்களைப் புனைந்துள்ளார்.
“குட்டி குட்டி மேகமே
விண்ணைத் தொடும் மேகமே
பட்டி எங்கும் வட்டமாய்
சுட்டி போலத் தெரியுமே
குட்டி சுட்டி மேகமே”
இந்தப் பாடலை நூல் வெளியீட்டு விழாவில் குழந்தை ஒன்று பார்க்காமல் பாடி அனைவரையும் அசத்தியது.

கதை சொல்லியாக சிறார் இலக்கியத்தில் அறிமுகமான இவர் குறுநாவல், சிறார் பாடல்கள், கதைகள் என அடுத்தடுத்த கட்டத்தில் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளார்.
சிறார்களுக்காக கதை சொல்பவர்களுள் மிக முக்கியமானவர் கார்த்திகா கவின்குமார் அவர்கள். இவரின் கதை சொல்லும் பாங்கு குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கதை சொல்லிகளுக்குத் தேவையான குரல் வளம், மொழி வளம், குழந்தமை மிக இயல்பாகக் கை வரப்பெற்றுள்ளார். இதனால் நிறைய குழந்தைகள் இவரின் கதைகளை விரும்பிக் கேட்கிறார்கள்.
முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் நன்கு புலமை பெற்றுள்ளார்.
குழந்தைகளுக்கு இன்னும் நிறைய படைப்புகளை கொண்டு வருவதற்கான கருப்பொருளையும், கச்சாப் பொருளையும் தன்னகத்தேக் கொண்டுள்ள கார்த்திகா கவின்குமார் அவர்கள் இன்னும் நிறைய சிறார் நூல்களைப் படைத்திட இனிய வாழ்த்துக்கள்.
குழந்தைகளின் அத்தை ஆமையத்தையோடு வந்துள்ளார்.
-உமையவன்.














