வேடந்தாங்களுக்கு பறவைகள் வருவது போல், ஆவூர் ஊர்புற நூலகத்தை நோக்கி படிக்க படையெடுக்கும் குழந்தைகள்!
22.12.2025
ஆக்கம்:
எஸ். சிவக்குமார்
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்
Mob.807 222 6768
விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளின் வாழ்க்கையில் ஓய்வும் விளையாட்டும் மட்டுமே நினைவிற்கு வரும் காலமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் கிராமத்தில் உள்ள ஊர் புற நூலக மையம், விடுமுறை காலத்தையும் கல்வியின் பொன்னான வாய்ப்பாக மாற்றிக் காட்டுகிறது.
வேடந்தாங்களுக்கு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வது போல,
படிப்பதற்கான ஆர்வத்துடன் குழந்தைகள் ஆவூர் நூலகத்தை நோக்கி படையெடுத்து வருவது சமூகத்திற்கு ஒரு நம்பிக்கையூட்டும் காட்சியாக உள்ளது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வு (NMMS) என்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு இறக்கை கட்டும் ஒரு முக்கியமான தேர்வாகும்.
அந்தத் தேர்விற்கான பயிற்சி ஆவூர் ஊரக நூலக மையத்தில் நடைபெற உள்ளதை அறிந்ததும், மாணவர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து கொள்ள வருவது அவர்களின் கல்வி விழிப்புணர்ச்சியையும் இலக்குணர்வையும் வெளிப்படுத்துகிறது.
பெற்றோர்கள் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தாலும், கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி என்ற நம்பிக்கையை குழந்தைகளின் கண்களில் காண முடிகிறது.
நூலகம் இன்று வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட இடமாக இல்லாமல், மாணவர்களின் கனவுகள் மலரும் கல்வி மையமாக மாறியுள்ளது.
விடுமுறை காலத்தில் வீட்டில் சோர்வாக நேரத்தை கழிப்பதற்குப் பதிலாக, நூலகத்தில் அமர்ந்து படிப்பதும், பயிற்சி வினாக்களைத் எழுதிப் பார்ப்பது, சந்தேகங்களை கேட்டறிவதும் குழந்தைகளின் சுயக் கற்றல் மனப்பாங்கை வளர்க்கிறது.
இது பள்ளி நேரக் கல்வியைத் தாண்டி, வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குகிறது.
இந்த முயற்சியில் ஆசிரியர்கள், , நூலக பொறுப்பாளர் B. நாகலட்சுமி மற்றும் சமூகத்தினரின் பங்கு மிகவும் முக்கியமானது.
கல்வி என்பது பள்ளியின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே முடங்கியதல்ல; சமூகத்தின் ஆதரவுடன் அது எங்கும் மலர முடியும் என்பதற்கு ஆவூர் நூலகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
சிறிய கிராமத்தில் இருந்து பெரிய கனவுகள் உருவாக முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூலகம் விதைத்து வருகிறது.
மொத்தத்தில், வேடந்தாங்களுக்கு பறவைகள் வருவது இயற்கையின் அழகு என்றால்,
விடுமுறை காலத்தில் ஆவூர் நூலகத்திற்கு படிப்பதற்காக குழந்தைகள் வருவது சமூகத்தின் கல்வி அழகு ஆகும்.
இந்தப் படிப்பு ஆர்வம் தொடரும்போது, நாளைய சமுதாயம் அறிவு செல்வம் கொண்டதாக உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.














