• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளியில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த தொடர் நிகழ்வு!
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளியில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த தொடர் நிகழ்வு!

Email :257

திருச்சிராப்பள்ளியில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த தொடர் நிகழ்வு!

காவிரிக் கவித்தமிழ் முற்றம் அறிவிப்பு!

“இனிய கவிதைக்கு மட்டுமே என்று இறைவன் ஒரு கிரகம் செய்து கதிரவனை வைத்து அதற்கெனக் கடிகாரம் செய்தால் சின்ன முள்ளாக கவிக்கோவின் மரபுக்கவிதை பேனா பெரிய முள்ளாக அவர் புதுக்கவிதை பேனா அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை” என பேராசிரியர்  கவியருவி தி.மு.அப்துல் காதர் புகழாரம் செய்த கவிக்கோ அப்துல் ரகுமானை இளையோருக்குக் கொண்டு சேர்க்கும் பணியைத் தம் கரத்தில்  எடுத்திருக்கிறது திருச்சிராப்பள்ளியில் இயங்கும் காவிரிக் கவித்தமிழ் முற்றம்.

மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை என கோலோச்சியதுடன் கஜல் உள்ளிட்ட அயலகக் கவிதை வடிவங்களை அன்னைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

ஞானத்தின் விளைச்சலான   கவிக்கோவின் எழுத்துக்கள் இளையோரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கவிக்கோ அப்துல் ரகுமான் : ஞானத்தால் நிறைந்த வானம்’ என்கிற பொருண்மையில் கவிக்கோ குறித்த 25 தொடர் நிகழ்வுகளை (2025 ஆம் ஆண்டு 12 நிகழ்வுகள் – 2026 ஆம் ஆண்டு 12 நிகழ்வுகள் – 2027 ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு நிறைவு விழா) நடத்தத் திட்டமிட்டுள்ளது காவிரிக் கவித்தமிழ் முற்றம்.

முதல் நிகழ்வு

2025 ஜனவரி 26 ஆம் தேதி திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க சிற்றரங்கில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த இளையோர் கவியரங்கை முதல் நிகழ்வாக நடத்துகிறது.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்க சாசனத்தலைவர் லயன் B.முகமது ஷபி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சொல்லின் செல்வர் குரல்முரசு கவிஞர் கதிரவன் (எ) அ‌.காதர் பாட்ஷா  திண்டுக்கல் மாநகரில் இருந்து வருகைதந்து தலைமைக் கவிஞராக சிறப்பிக்கிறார்.

கவிக்கோ அப்துல் ரகுமான்: ஆயுதமின்றி சமர் செய்யும் ‘நீர்’ என்ற தலைப்பில் கவிஞர் சா.மு.ராஷித் அகமது,

கவிக்கோ அப்துல் ரகுமான்:
அழுக்குப்பற்றாத ‘நெருப்பு’ என்ற தலைப்பில் கலிஞர் செ.ஜா.அரசி மார்லின்,

கவிக்கோ அப்துல் ரகுமான்: எழுதுகோலால் உழப்பட்ட ‘நிலம்’ என்ற தலைப்பில் கவிஞர் சுஜாதா சஞ்சய் குமார்,

கவிக்கோ அப்துல் ரகுமான்: ஞானத்தால் விரிந்த ‘வானம்’ என்ற தலைப்பில் கவிஞர் ச.ஆஷிக் டோனி,

கவிக்கோ அப்துல் ரகுமான்: பாட்டுக்கொடி ஏற்றும் ‘காற்று’ என்ற தலைப்பில்
கவிஞர் மு.வசீர் அகமத் ஆகியோர் கவி பாட உள்ளனர்.

கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுக்கு நெருக்கமான இளையோரை காவிரிக் கவித்தமிழ் முற்றம் முன்னெடுக்கும் கவிக்கோ தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிக்க அனுப்பிட வேண்டும் என காவிரிக் கவித்தமிழ் முற்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts