• Home
  • தமிழ்நாடு
  • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 – வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்!
தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 – வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்!

Email :19

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 – வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 10:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) மற்றும் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) முதுநிலை மற்றும் ஆய்வியல் வேதியியல் துறை ஆகியவை இணைந்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC)-2026 மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை இன்று சிறப்பாக நடத்தின.

இந்தியாவில் பல ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் அமைப்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) செயல்பட்டு வருகிறது. இளம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, ஆய்வுத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதில் இவ்வமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது.

“நிலைத்தன்மைக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இப்பயிற்சியில், R5 கழிவு மேலாண்மை (Reduce, Reuse, Retrieve, Redesign, Recycle), E4 ஆற்றல் (Explore, Experiment, Enhance, Evolve), நீர் மேலாண்மை, உணவு, வேளாண்மை மற்றும் ஆரோக்கியம், நிலைத்தன்மைக்கான இந்திய பாரம்பரிய அறிவு அமைப்புகளின் (IKS) பயன்பாடு, திட்டத் தயாரிப்பு மற்றும் விளக்கக்காட்சி உள்ளிட்ட தலைப்புகளில் விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான ஆய்வுத் திட்டங்களில் பொருத்தமான துணைக் கருப்பொருளை (Sub-theme) தேர்வு செய்வது, சமூகப் பிரச்சினைகளை அறிவியல் ஆய்வுத் திட்டங்களாக வடிவமைப்பது, குழந்தை விஞ்ஞானிகளுக்கு திறம்பட வழிகாட்டுவது மற்றும் ஆய்வுத் திட்டங்களை சிறப்பாக வழங்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த வழிகாட்டி ஆசிரியர்களுடன், பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுநிலை மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குழந்தை விஞ்ஞானிகளுக்கு வழிகாட்ட தேவையான திறன்களைப் பெற்றனர்.

கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி வழிகாட்டி ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts