
இன்று பாவாணர் நினைவேந்தல் நாள்…
தேவநேயக் கோட்பாடு
மொழியியல் உலகம் குறிப்பிட வேண்டிய பாவாணரின் சுட்டடிக் கோட்பாடு ….
அ, இ, உ ……
தேவநேயப் பாவாணர் எனும் பேரறிவர் ஆய்வுமுறையினை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
தமிழ்ச்சொற்களின் பிறப்பாக்கத்தை உயிர் தோற்ற , பிறப்பாக்கத்தின் அடிப்படையிலேயே அவர் ஆய்ந்திருக்கின்றார்.
அறிவியலாளர்கள் உயிரிகளை இருவகை நுண்ணுயிரிகளாவே பகுப்பர் . இந்த ஒற்றைச் சில்லிகளை ( செல்) நிலைச்சில்லி ( protofit) என்றும் நகர்ச்சில்லி ( Portozoa) என்றும் பகுப்பர். ஒன்று நிலையாக ஓரே இடத்தில் இருப்பது மற்றொன்று நகர்வது. இரண்டுக்கும் அசைவு உண்டு. ஆனால் ஒன்றின் அசைவு அதனிடத்திலும் அதற்குள்ளாகவும் நடக்கும்.


மற்றொன்றின் நகர்வோ ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லும்.
இத்தகு உயிரியக்க நுண்மையைப் போன்றே சொல் பிறப்பும் தோற்றமும் முற்படலும் முற்செலவும் அமைந்துள்ளதை நுணுகிப் பார்த்து வெளிப்படுத்திய பாவணரின் பேரறிவைப் பார்த்து நான் வியக்கின்றேன். பாவாணர் சொல்லியக்கத்தையும் இருவகையாகவே சொல்வார். ஒன்று தம்மிடத்தே நிகழும் நகர்ச்சி மற்றொன்று இடம் விட்டு இடம் செல்லும் நகர்ச்சி.

தனக்குள் நிகழும் நகர்ச்சியில் கருக்கொள்ளும், தோன்றும், முற்படும், இடம்பெயராமல் உயரும். இடம் பெயரும் நகர்ச்சியில் தோன்றி முற்பட்டு முன்னுறும் முன்செலும் . முன்சென்றது உந்தி முந்தி மற்றொன்றினிடத்து நெருங்கும் நெருங்கியது பின்னர் அதனைத் தொடும் தொட்டது அதனோடு சேரும் இல்லையெனில் அப்பொருள் மெல்லிதாயின் அதனைத் துளைக்கும் துருவும் அப்பொருள் வல்லிதாயின் துளைக்க முடியாமல் வளையும்.
இத்தகு வினையியக்கமே சொற்களின் கருத்து வளர்ச்சி இயக்கமென பாவாணர் ஆய்ந்துள்ளார்; கண்டு பிடித்துள்ளார். தமிழ்ச்சொற்களின் வகைப்பாடுகளை ஆய்கின்ற வேளை அவ்வண்ணமே அமைந்துள்ளன. இதற்குச் சுட்டடிச் சொற்கட்டமைப்பும் மூலமுமே வித்தாக அமைந்துள்ளதைப் பாவாணர் ஏரணவியலாய் விளக்கியுள்ளார்.
இது பெறற்கரிய மொழிநூலியல் கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டை மிகச் செப்பமாக்க் கண்டறிந்து ஆராய்து நெறிப்பாடுகளை வெளிப்படுத்தியவர் பாவாணரே.
பாவாணரின் கண்டுபிடிப்பு உலக மொழியியலாளர்களால் குறிப்பிடப்பட , கவனிக்கப்பட வேண்டிய மொழியியல் கோட்பாடாகும். அதுவே சுட்டடிக் கோட்பாடு. தேவநேயக் கோட்பாடு.
இரா.திருமாவளவன்.















