• Home
  • உலகம்
  • பொருள் பொதிந்த கட்டமைப்புகளைக் கொண்ட தொன்மை மொழியான தமிழை நாம் நம் தாய்மொழியாகக் கொண்டதற்குப் பெருமை பட வேண்டும்.
உலகம்

பொருள் பொதிந்த கட்டமைப்புகளைக் கொண்ட தொன்மை மொழியான தமிழை நாம் நம் தாய்மொழியாகக் கொண்டதற்குப் பெருமை பட வேண்டும்.

Email :112

பொருள் பொதிந்த கட்டமைப்புகளைக் கொண்ட தொன்மை மொழியான தமிழை நாம் நம் தாய்மொழியாகக் கொண்டதற்குப் பெருமை பட வேண்டும்.
கடந்த 03/10/2025 ஆம் நாள் வெள்ளிக் கிழமை கிள்ளான் புக்கிட் இராசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பெற்ற தமிழ்மொழி வார விழாவில் நான் சிறப்புரை நிகழ்த்திய வேளை தமிழ்மொழியின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கியுரைத்தேன்.
தமிழ், நம் தாய்மொழி, உலகின் தொன்மை மொழி; மிகச் சிறந்த அறிவியல் கட்டமைப்புகளையும் அறநெறிகளை உணர்த்தும் நூல்களையும் கொண்டுள்ள மொழியாகும்.

மாணவர்கள் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் போதே அறம்செய்ய விரும்பு ஆறுவது சினம் எனும் ஆத்திசூடியைச் சொல்லிக் கொடுப்பார்கள்; அது மட்டுமல்லாமல் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் எனும் உகநீதியைச் சொல்லிக் கொடுப்பார்கள்…
இவற்றுக்கும் மேலாக உயர்ந்த நெறிகளைக் கூறும் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் நாம் தமிழில்தான் காண முடியும். தமிழைப் பயின்றவர்க்குத் தான் இவை தெரியும். உங்களைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களை நான் நெஞ்சாரப் போற்றுகின்றேன்.
தமிழ் தனித்தியங்க வல்ல மொழியாகும். தமிழ் மொழிக்கலப்பில்லாமல் தூயதாக விளங்கும் போதுதான் வாழும். இங்கு , நாளும் தமிழ்; நாவில் தமிழ் எனும் அருமையான கருப்பொருளை அமைத்துள்ளீர்கள்;  தமிழ் நாளும் வாழ வேண்மாயின் முதற்கண் நாவில் இனிக்க இனிக்கப் பயன்பட வேண்டும்..
நாம் நம் வீட்டில் பயன்படுத்தும்  ஒவ்வொரு பொருளையும் தமிழில் அழைக்கின்றோமா?

என்பதை எண்ணிப் பாருங்கள்… நாளும் நாவில் தமிழ் என்றால்.. நாம் பேசும் போது  கலப்பில்லாத் தமிழைப் பயன்படுத்தினால்தான் தமிழ் சிறக்கும்;  பொருள் சிறக்கும்.
மாணவர்கள் இனிமேல் வீட்டுக்குச் சென்றதும் இதனைக் கருத்தில் கொண்டு தமிழில் பொருள்களை அழையுங்கள். ஒரு குறிப்பேட்டை அமைத்துக் கொண்டு நற்றமிழ்ச் சொற்களைத் தேடித் தேடி கண்டறிந்து குறித்துக் கொண்டு பயன்படுத்துங்கள்.
எனப் பல்வேறு கருத்துகளை மாணவர் நெஞ்சில் பதியும் படிச் சொல்லி உரைநிகழ்த்தினேன்.

இவ்விழாவினை சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்த்திரு தமிழரசு திறந்து வைத்து உரைநிகழ்த்தினார். பள்ளித் தலைமையாசிரியர் நிறைமலி சிவமலர் அவர்கள் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர்களும், ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் கலந்து சிறப்பு செய்தனர்.

இரா.திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts