“விதை” — மண்ணில் விதைக்கும் குழந்தை, மனத்தில் விதைக்கும் ஆசிரியர்!
ஆக்கம்:
S.சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்
Mob..6383690730
Email.sivakumardiet@gmail.com

அறிமுகம்:
கிராமப்புற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விடியற்காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். இத்தகைய சூழலில், குழந்தைகளின் உள்ளத்தில் நல்ல சிந்தனைகளின் விதைகளை விதைப்பதற்கு திருச்சி மாவட்டம், பாதர் பேட்டை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் எம். தனலட்சுமி அயராது உழைக்கும் கல்வி பணியை மேற்கொள்கிறார்.
விளக்கம்:
விதை என்பது ஒரு சிறியதாக இருந்தாலும், அதன் உள்ளே ஒரு முழுமையான வாழ்க்கை அடங்கியுள்ளது.
அது போன்று, ஒரு ஆசிரியர் குழந்தையின் மனதில் விதைக்கும் நல்ல பண்புகளும், சமூக உணர்வும், நேர்மை, கருணை போன்ற தலைசிறந்த மனிதப்பண்புகளும் காலப்போக்கில் ஒரு சக்திவாய்ந்த மரமாக முளைத்து, சமூகத்தில் நற்சுத்தங்களை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பள்ளியில் ஒழுக்கம், பசுமை, பாசம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை போன்ற நல்ல குணங்களைக் கற்றுக்கொண்டு வீட்டிற்கு சென்று, மண்ணில் விதைகளை ஊன்றிப் பசுமையை வளர்க்கிறார்கள்.
“விதை முளைக்க தகுந்த மண் வேண்டும்; நல்ல சமுதாயம் மலர நல்ல சிந்தனை வேண்டும்” என்பதுபோல், ஆசிரியர் விதைக்கும் ஒவ்வொரு நல்ல எண்ணமும் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக மாற்றுகிறது.
விதையின் முக்கியத்துவம்:
புதிய தொடக்கங்கள்: ஒரு சிறிய விதை முளைத்து பெரிய மரமாக வளர்கிறது. அதேபோல், ஒரு சிறிய நல்ல எண்ணம், ஒரு குழந்தையின் வாழ்க்கையை முழுமையாக மாற்றும்.
தன்னம்பிக்கை: விதையை நட்டவுடன் அது உடனே முளைக்காது; ஆனால் பொறுமையும் முயற்சியும் அவசியம். இதன் மூலம் குழந்தைகள் பொறுமை, விடாமுயற்சி போன்ற முக்கியமான பண்புகளை கற்றுக்கொள்கிறார்கள்.
பசுமை பராமரிப்பு: மரங்களை வளர்த்தால் மழை வரும், நிலம் வளம் பெறும் என்பதை குழந்தைகள் நேரடியாக அனுபவிக்கின்றனர். இது சுற்றுச்சூழல் அக்கறையை வளர்க்கிறது.
சமூக பொறுப்பு: விதையை வளர்ப்பது போன்றே, நல்ல செயல்களைத் தொடங்கிவைத்து அதை தொடர்ந்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு, மண்ணில் விதைக்கும் குழந்தைகள், மனதில் விதைக்கும் ஆசிரியர்களால், ஒரு பசுமைமிக்க, ஒற்றுமை நிறைந்த, பண்புகள் மலரும் சமூகத்தை உருவாக்க முடியும்.
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வரிகளை நியாயப்படுத்தும் வகையில், குழந்தைகளுக்காக உழைக்கும் ஆசிரியர் எம். தனலட்சுமிக்கும், அவரின் பாசத்தால் செழித்து வளரும் குழந்தைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!














