
இன்று 31.01.2025 திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக அலுவலர் (District Library Officer) திரு.அ.பொ.சிவகுமார் அவர்கள் 36 ஆண்டுகள் பணி நிறைவு செய்து இன்றுடன் ஓய்வு பெற்றார்கள்.
அவர்களை இன்று மாலை மாவட்ட மைய நூலகத்தில் அனைத்து நூலக வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்தி அவரது இல்லத்திற்கு வழியனுப்பி வைத்தோம். இதில் வாசகர் வட்டம் மட்டுமல்லாது பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் /செயலர்கள் மைய நூலக ஊழியர்கள் நண்பர்கள் என பலரும் பங்கேற்றனர். அவரது ஓய்வு காலம் அமைதியாக அமைந்திட வாழ்த்துகள்.

மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ.சிவகுமார் அவர்கள் 2002 ஆண்டு முதல் மாவட்ட நூலக அலுவலராக பணியாற்றி வருகின்றார்கள். அச்சமயம் மாவட்ட மைய நூலகம் இருந்த இடமே தெரியாமல் பர்மா பஜார் கடைகளுக்கு நடுவில் மிகவும் சிதிலமடைந்த கட்டிடமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. நமது DLO அவர்களின் சீரிய முயற்சியால் 2009 – 2010 ஆண்டு வாக்கில் நூலக வளாகத்தில் இயங்கி வந்த அனைத்து பர்மா பஜார் கடைகளையும் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் 3/4 ஏக்கர் பரப்பளவில் தற்போது உள்ள பிரமாண்டமான நூலக வளாகம் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேலான செலவில் கட்டப்பட்டது. அன்றைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு.K.N.நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இன்றைய இந்த பிரமாண்ட நூலக வளாகத்திற்கு தினமும் 1000 கணக்கில் வாசகர்கள் வந்து செல்வதும் / கல்லூரி மாணவ மாணவிகள் வந்து படிப்பது / குறிப்பாக அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகும் 100 கணக்கானோர் பயன்படுத்தி வெற்றி பெறுவதும் நமது DLO அவர்களின் சிறப்பான பணியின் சாதனங்கள் ஆகும்.
எனது சிறுவயதில் என் தாத்தாவுடன் 9 வயது முதல் (1986 முதல்) மாவட்ட மைய நூலகம் வந்து நூல்கள் வாங்கி செல்லும்போது நூல்கள் இரவல் பகுதி மற்றும் அமர்ந்து படிக்க ஒரு சிறிய பகுதி மட்டுமே இருக்கும். ஆனால் இன்றைக்கு முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட நூல்கள் இரவல் பகுதி/ குழந்தைகள் படிக்க தனி பகுதி/ செய்தித்தாள்கள் படிக்க தனி பகுதி/ கணினி மையம் / Reference புத்தகம் உள்ள பகுதி/குளிர்சாதன வசதியுடன் கூட்ட அரங்கு/ பள்ளி மாணவ மாணவிகளுக்கு என தனி அறிவியல் பகுதி இரண்டாம் தளத்தில்/ போட்டி தேர்வர்கள் படிக்க தனி பகுதி / Physically Challenged(பார்வையற்றோர்) படிக்க Braille வகை நூல்கள் மேலும் யார் உதவியும் இல்லாமல் அவர்கள் தங்கள் புத்தகம் இருக்கும் பகுதிக்கும் டாய்லெட் பகுதி செல்ல பிரத்யேக டைல்ஸ் / Wifi வசதி நல்ல முறையில் இயங்கும் வாசகர் வட்டம் என இன்னும் இன்னும் நல்ல பல விஷயங்கள் நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இருப்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பலருக்கும் பயன்படும்படி சிறப்பாக இயங்கி வருகிறது.

நூலகம் உள்ளே சென்றால் அனைத்து பகுதிகளிலும் மாணவ மாணவியர் படிப்பதும் எழுதுவதும் சாப்பிடுவதும் தனியார் அமைப்புகள் உதவியுடன் அரசு தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் என ஜன கூட்டம் நிரம்பி வழிய காரணம் நமது ஜன நாயகன் திரு.அ.பொ.சிவகுமார் அவர்கள்தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.
இந்த சிறப்பான நூலகத்தினை உருவாக்க பாடுபட்ட நூலக நாயகர் திரு.அ.பொ.சிவகுமார் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தோம். அவருடன் நானும் மைய நூலக வாசகர் வட்டத்தில் 2017ம் ஆண்டு முதல் இணைந்து மாவட்ட மைய நூலக வளர்ச்சியில் பங்கேற்றது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது.
வி.வே.விஸ்வேஸ்வரன்
வாசகர் வட்ட தலைவர்
அரசு கிளை நூலகம் திருவானைக்காவல்.












