“ஆவூர் நூலகத்தில் மகளிர் தின விழா ”
ஆக்கம்: எஸ்.சிவகுமார், முதல்வர்( பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சியிலும் காஞ்சிபுரம் மாவட்டம்.
ஆவூர், புதுக்கோட்டை மாவட்டம்: ஆவூர் ஊர்புற நூலகத்தில் 2025 மார்ச் 6 ஆம் தேதி மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆவூர் உதவி ஆர்.சி. தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
9ஆம் வகுப்பு மாணவிகள் வாணிஸ்ரீ, சிவசங்கரி, தனலெட்சுமி, காவ்யா, கௌசல்யா, லெவினா, ஜோஸ்வாமேரி, லிவின்சியா, யோஜனா ஆகியோர் பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து கவிதைகள் வாசித்து, சிறப்புரை நிகழ்த்தி அனைவரின் பாராட்டைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் நூலக வாசகர் வட்டத் தலைவர் திருமதி ஜெய மேரி வரவேற்பு உரையாற்றி, மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். வாசகர் வட்ட உறுப்பினர்களான திருமதி அருள் மேரி மற்றும் நேசமணி பெண்கள் கல்வியின் அவசியம், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினர்.
மகளிர் மன்றத் தலைவி திருமதி ஜூலி, பெண்கள் சுயமாக முன்னேறுவதற்கான வழிகளை எடுத்துரைக்க, நூலக நண்பர் மற்றும் ஆசிரியர் திருமதி சகாய மேரி, கல்விக்கு வயது தடை இல்லை, வாசிப்பு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்பதைக் கூறி, மாணவர்களை ஊக்கமூட்டினார்.
சாந்தஷீலா, சந்தன மேரி, புளோராஜாஸ்மின், நான்சி ரேச்சல் உள்ளிட்டோர் விழாவை சிறப்பித்தனர். மேலும், நூலக வளர்ச்சிக்காக திரு. ஜான்சன் ரூ. 1000 நன்கொடையாக வழங்கி, நூலகப் புரவலராக இணைந்தார்.
இவ்விழாவின் நிறைவில் நூலகர் திருமதி நாகலெட்சுமி அனைவருக்கும் நன்றியுரை தெரிவித்தார்.














