இடர்களுக்கு நடுவிலும் மரம் வளர்க்கும் பணி – பொன்மலையில் தொடரும் பசுமைப் பயணம்!
திருச்சி பொன்மலையில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் மரக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றி, தொடர்ந்து பராமரித்து வரும் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தின் பொன்மலை கே.சி.நீலமேகத்தின் பசுமைப் பணி பாராட்டுக்குரியதாக உள்ளது.
பொன்மலை மற்றும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் நிலையில், தற்போது பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பகுதியில் புல்வெளி தீப்பற்றி கருகிய நிலையிலும், கடுமையான வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையிலும் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மரம் நடுவது மட்டுமல்லாமல், அவை வளர்ந்து பெரிய மரங்களாகும் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார் கே.சி.நீலமேகம். பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும், “பொன்மலையை பசுமையாக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரு மரக்கன்று நடுவது எளிது; அதை உயிருடன் வளர்ப்பதுதான் உண்மையான சுற்றுச்சூழல் பணி என்பதை உணர்த்தும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
“ஒரு மரம் வளர்ப்பது என்பது ஒரு தலைமுறைக்கு நிழல் கொடுப்பது.
இடர்கள் வந்தாலும் மரம் வளர்ப்பதை நிறுத்தக்கூடாது.”
பொதுமக்களும் இளைஞர்களும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
மரங்களை பாதுகாப்பது என்பது நமது எதிர்கால தலைமுறையை பாதுகாப்பதற்கு சமம் என தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் பொன்மலை கே.சி.நீலமேகம் வலியுறுத்தியுள்ளார்.













