• Home
  • தமிழ்நாடு
  • திருச்சியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் பவள விழா!
தமிழ்நாடு

திருச்சியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் பவள விழா!

Email :39

திருச்சியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் பவள விழா!

திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கிய கழகத்தின் பவளவிழா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள யூபிலி அரங்கில் நடைபெற்றது.

உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற பெருமுயற்சி எடுத்த தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகளாகத் தமிழ்ப் பணியாற்றி வரும் திருச்சிராப்பள்ளித் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவரும் கோட்டாறு மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயருமான மேதகு பீட்டர் ரெமிஜியுஸ்  ஆண்டகை விழாவிற்கு தலைமை வகித்தார். தமிழ் இலக்கிய கழக இயக்குநர் அருட்பணி விக்டர் ஜெயபாலன் வரவேற்புரை யாற்றினார்.

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராகப்  பங்கேற்று கழகத்தின் நிறுவுநர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைத்து, பவள விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பவள விழா மலரைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் முனைவர் கு.சின்னப்பன் பெற்றுக்கொண்டார்.

பல்வேறு தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய தமிழே அமிழ்தே என்னும் சிறப்பு நூல் வெளியிடப்பட்டது. திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் அந்துவான் அடிகளார் வெளியிட  பிரதிகளை எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சத்யன் பெற்றுக் கொண்டனர். தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் அருட்பணி அமுதன் அடிகள் கடந்து வந்த பாதை என்கிற பொருண்மையில் தமிழ் இலக்கியக் கழக வரலாற்றை எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.

செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச., தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருஅவைப் பேராயர் மாமறைதிரு முனைவர் அ.கிறிஸ்டியன் சாம்ராஜ், தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் பேரருள் திரு சி.சாமுவேல் ராஜதுரை, உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் முனைவர் இ.ஆர். இரவிச்சந்திரன், ஜமால் முகமது கல்லூரித் தேர்வு நெறியாளர் முனைவர் அ.சையத் ஜாகீர் அசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் இலக்கியக் கழகத்தின் முன்னாள் இயக்குனர்கள் அருள்பணி ஜோசப் லூர்து ராஜா, அருள்பணி விக்டர், அருள்முனைவர் ஆ. ஜோசப் சே.ச. இணை இயக்குனர் டேவிட் சிட்னி பேசில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழே அமிழ்தே சிறப்பு நூலின் கட்டுரை ஆசிரியர்கள், விழா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழாவில் பாராட்டப் பெற்றனர். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி, தூய வளனார் கல்லூரி, புனித சிலுவை கல்லூரி, புனித சிலுவைக் கல்வியியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, காவிரி மகளிர் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி, ஜேம்ஸ் அகாடமி,  மலையடிப்பட்டி மதர் தெரசா தொடக்கப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்‌, தமிழ் இலக்கியக் கழக வாசகர் வட்ட உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பயனடைந்தனர்.

கலைக்காவிரிக் நுண்கலைக் கல்லூரிப்  பேராசிரியர் கி‌.சதீஷ்குமார் மற்றும் திருமதி மேரி மார்டீனா ஆகியோர் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தனர். நிறைவில் ஜமால் முகமது கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜனார்த்தலிபேகம் நன்றியுரையாற்றினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts