பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு!
மக்கள் சக்தி இயக்கம் – தண்ணீர் அமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கல்
பிரபல சமையல் கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவருமான செஃப் தாமு (வயது 72) அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமைக்குரியவர். 2010-ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகச் சமைத்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தவர்.
சமையல் கலையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2025-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளிலும், குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் அன்பையும் பெற்றவர். பலராலும் அன்புடன் ‘தாமு அப்பா’ என்று அழைக்கப்பட்டவர்.
தனது சமையல் திறமை, எளிமையான அணுகுமுறை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த செஃப் தாமு அவர்களின் மறைவு, சமையல் கலைத் துறைக்கும் தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
இப்படிக்கு,
கே.சி. நீலமேகம்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் சக்தி இயக்கம்
செயல் தலைவர்,
தண்ணீர் அமைப்பு.












