
கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழாவினை முன்னிட்டு திருக்குறளைப் பரப்பும் வகையில் புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், வினாடி வினா ஆகிய
நிகழ்ச்சிகளை டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று 23.12.2024 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 24.12.2024 இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழ்ச்செம்மல் சோம. வீரப்பன், அவர்கள் “திருக்குறளில் மேலாண்மைச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் ஒளிப்பட விளக்கக் காட்சிகளுடன் சிறப்புரையாற்றினார்.
அவரது உரைக்குப் பின்னர் கருத்தரங்கில் பங்கு பெற்றோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ. சிவகுமார், துவக்கி வைத்து உரையாடினார். வாசகர் வட்டத் தலைவர் வீ. கோவிந்தசாமி வரவேற்புரை ஆற்றினார்.


கருத்தரங்கில் கவிஞர் நந்தலாலா, வாசகர் வட்ட நிர்வாகிகள் கி. நன்மாறன், க. மாரிமுத்து, அமுதா, மாவட்ட மைய முதல் நிலை நூலகர், சு. தனலெட்சுமி, வாசகர்கள், மாணவர்கள், குரல் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவில் வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் செ. அருணாசலம் நன்றி கூறினார்.


இதனைத் தொடர்ந்து 26.12.2024 அன்று சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் , 28ஆம் தேதி பேச்சுப்போட்டி, 29ஆம் தேதி வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி, 30, 31.12.2024 ஆகிய தேதிகளில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளன. கருத்தரங்கில் கவிஞர் நந்தலாலா, திருக்குறள் சு. முருகானந்தம், முனைவர் பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.













