
இல்லந்தோறும்
அன்பும் அறமும் இன்பமும் பொங்கட்டும்
சீர்மிகு தமிழர் நிலத்தில்
முத்தமிழும்
முப்பாலும் பொங்கட்டும்
உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாள்
உழவை உழவர்களை போற்றிடும் உயர் பெருநாள்
செங்கரும்பு மஞ்சள் சிறுபீளைப் பூ வெப்பாலைத் தோரணம் வாசல் தோறும் வண்ணக் கோலங்கள்
பல்லுயிர்களைக் கொண்டாடும் தமிழர் திருநாள்
திமிலோடும் தமிழோடும் கூர்மை பண்பாட்டுடன் பாயும் திணைகளின் திருநாள்
உயிர்கள் யாவையும் உறவாய் இணைத்து சமத்துவம் சமைத்து மத சாதிய சனாதனங்களை பழையன கழிதலாய் எரிக்கும் மாண்பு நிறை மானுடத் திருநாள்
புத்தாடை புது அரிசி புதுப்பானை
இதயத்தில் காதல் பொங்க
பரங்கிப் பூக்களும் பூசணிப் பூக்களும் தை மகளுக்கு மாலைகள் சூட்ட
சலங்கைக் கட்டி
குஞ்சங்கள் கட்டி
கொம்புகளில் குப்பியாடும்
காளைகள் கால்நடைகள் கொண்டாடும் பெருநாள்
வாடி வாசலில் ஏறு தழுவி
ஏற்றம் தழுவி
வாழ்வு தழுவி
வளங்கள் தழுவி
வழுவாத தமிழர் மறத்தின் மரபு தழுவி
அறம் தழுவி
மாண்பு தழுவி
மானம் தழுவி
மகிழ்வு தழுவி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கொண்டாடுவோம்
தைத் திருநாள் தமிழர் திருநாள்
வாழ்த்துகள்.
சதீஷ் குமரன்
பேராசிரியர், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி,
செயலர், தண்ணீர் அமைப்பு.













